துரை மருத்துவக் கல்லூரியில், பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சில ஆவணங்களைத் திருடி, எதிர்க்கட்சிகளை திகிலில் ஆழ்த்தினார் தாசில்தார் சம்பூர்ணம். அமைச்சர் செல்லூர் ராஜுவின் உத்தரவின் பேரில் மதுரை கலெக்டர் நடராஜனின் தூண்டு தலில்தான் தாசில்தார் சம்பூர்ணம் வாக்கு இயந்திர அறைக்குள் சென்றிருக்கிறார் என்பது அம்பலமானது. தாசில்தாருடன் மாநகராட்சியில் உதவி யாளர்களாகப் பணிபுரியும் மூன்று பேரும் சென்றனர். இந்த விவரங்களை முழுமை யாக வெளியிட்டது நக்கீரன். அப்பட்டமான இந்த அத்து மீறலுக்கு நியாயம் வேண்டி யும், மதுரை கலெக்டர் நடராஜனை உடனடியாக மாற்ற வலியுறுத்தியும், வாக்கு எண்ணிக்கை மையமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன்.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத் தைச் சேர்ந்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தங்களது துறையைச் சேர்ந்த தாசில்தார் சம்பூர்ணத்தைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கேட்ட போது, ‘""வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறையின் சாவியை கலெக்டர்தான் என்னிடம் கொடுத்தார். ஆனால் என்னை சஸ்பெண்ட் பண்ணி, அவரைக் காப்பாற்றிக்கொண்டார். நான் அப் ரூவரா மாறி எல்லாவற்றையும் சொல்லப் போறேன்''’என சக அதிகாரிகளிடம் கண்ணீருடன் புலம்பியுள்ளார் சம்பூர்ணம். இந்த விவகாரமும் கலெக்டர் நடராஜனின் கவனத்திற்குப் போனதும் திகிலடித்துவிட்டது அவருக்கு.

s

சு.வெங்கடேசன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த 27-ஆம் தேதி, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு ஆரம்பமானது. வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் அருண் ஆகியோர் ஆஜராகினர். மதுரை கலெக்டர் நடராஜனை உடனடியாக மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார் ஆணையத்தின் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையில் தாசில்தார் சம்பூர்ணத்துடன் சென்ற வர்கள் பற்றிய விவரங்கள் இல்லை. தாசில்தாருக்கு உத்தரவிட்ட மதுரை கலெக்டரின் உதவியாளர் (ராஜகோபால்) மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழக தலைமைத் தேர் தல் அதிகாரி, ஒரு போஸ்ட்மேன் என்றால், எப்படி தேர்தலை நியாயமாக நடத்தமுடியும்? மதுரை கலெக்டரை மாற்றுவ தோடு நின்றுவிடக் கூடாது; அவர் மீது சட்டப்படி தகுந்த நட வடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்'' என சரமாரியாக வெடித்ததும் வெலவெலத்துப் போனார் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்.

மதுரை கலெக்டர் நடராஜனை தூக்கியடித்துவிட்டு, சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளராக இருக்கும் நாகராஜனை மதுரை கலெக்டராக நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதேபோல் கலெக்டரின் உதவியாளர் ராஜகோபாலை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். வழக்கு தொடர்ந்த சு.வெங்கடேசன் நம்மிடம் பேசும்போது, ""இது தற்காலிக வெற்றிதான். மே. 23-ஆம் தேதி நிரந்தர வெற்றி கிடைக்கும்''’என்றார் உற்சாகத்துடன்.

s

Advertisment

அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணா துரையோ, ""இந்தியாவிலேயே இந்த மாதிரி அசிங்கம் வேறெந்த மாநிலத்திலும் நடந்திருக்காது. தாசில்தாரின் அத்துமீறலுக்கு பின்னணியில் இருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்'' என்றார்.

நிர்மலாதேவி வழக்கில் ஆஜராகும் வக்கீலும் சுயேட்சை வேட்பாளருமான பசும்பொன் பாண்டியனிடம் நாம் பேசியபோது, ""அமைச்சர் செல்லூர் ராஜுவின் உத்தரவின் பேரில்தான் தாசில்தார் சம்பூர்ணம் வாக்கு இயந்திர அறைக்குள் சென்றார் என்பதை நக்கீரன்தான் ஆணித்தரமாக சொன்னது. எனவே செல்லூர் ராஜுவை மந்திரிசபையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். செல்லூர் ராஜுவின் இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடியும் பின்னணியில் இருக்கிறார். எனவே அவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மதுரை எம்.பி. தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்''’என்றார் ஆவேசமாக.

மதுரை மாநகர அ.தி.மு.க. புள்ளி ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு, ""செல்லூரார் தரப்புக்கு 10 "சி' வந்துச்சு. ஆனா வாக்காளர்களுக்கு சப்ளையானதோ 4 "சி'தான். அதனால் தான் செல்லூராரின் மதுரை மேற்குத் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைஞ்சு போச்சு. பூத் வாரியா ஓட்டுப் போட்டவர்களை டிக் அடிச்சிருக்கும் லிஸ்ட்டை கைப்பற்றத்தான் தாசில்தார் சம்பூர்ணத்தை கலெக்டரின் உதவியோடு உள்ளே அனுப்பி, இப்ப மாட்டிக்கிட்டாரு''’என்றார்.

நடராஜன் போய், நாகராஜன் மதுரை கலெக்டராக வந்தாலும் எதிர்க்கட்சி முகாமில் பதற்றம் தொடரத்தான் செய்கிறது. வாக்கு எண்ணிக்கை மைய மான மதுரை மருத்துவக் கல்லூரியில் இருக்கும் எதிர்க்கட்சி ஏஜெண்டுகள் இருபத்து நான்கு மணி நேரமும் படு உஷாராகவே இருக்கிறார்கள். ஆனாலும், அதிகாரம் கொண்ட ஆளுந் தரப்பு எந்த நேரத்தில் என்ன தில்லுமுல்லு செய்யுமோ என்ற பதற்றம் தமிழகம் முழுவதும் உள்ளது.

-அண்ணல்

படம் : ஸ்டாலின்